‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும்.
ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும்.
இது அரபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும்.
சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.
உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும்.
எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது!
‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும்.
யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்.
பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? என்ற விசயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.
பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர்.
இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர்.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.
இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது.
ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத்
கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-
நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007